பெருநிறுவன ஆலோசகர்கள் என்ற பதவிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, உலகெங்குமுள்ள பல்வேறு
நாடுகளை, திட்டமிட்ட முறையில் நயவஞ்சகமாக ஏமாற்றி, பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச்
சூறையாடுவதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்கின்ற பெருநிறுவனங்களின் ஊழியர்கள்தாம்
பொருளாதார அடியாட்கள். நிதி அறிக்கைகளில் தில்லுமுல்லு செய்வது, ஜனநாயகரீதியான
தேர்தல்களில் மோசடிகள் நிகழ்த்துவது, இலஞ்சம் கொடுப்பது, மிரட்டுவது, பெண்களைப் போகப்
பொருட்களாகப் பயன்படுத்திக் காரியம் சாதிப்பது, இவ்வளவு ஏன், படுகொலைகூடச் செய்வது
இவர்கள் சர்வசாதாரணமாகக் கையாள்கின்ற பல்வேறு உத்திகளாகும். பெருநிறுவனக்
கூலிப்படையினரைப்போலச் செயல்படுகின்ற இந்தப் பொருளாதார அடியாட்கள், ஏழை நாடுகளுக்கு,
வளர்ச்சித் திட்டங்கள் என்ற போர்வையில் தேவையற்றத் திட்டங்களை வடிவமைத்துக் கொடுத்து,
அவற்றுக்குப் பன்னாட்டு நிதி அமைப்புகள் மூலம் கடனும் வாங்கிக் கொடுத்து, அதன் மூலம்
அவற்றின் தலைகள்மீது பெரும் கடன் சுமைகளை ஏற்றி வைத்து, அத்திட்டங்களைச்
செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை வலுக்கட்டாயமாக அமெரிக்க நிறுவனங்களுக்குப் பெற்றுக்
கொடுத்து, அந்நாடுகள் என்றென்றும் அந்நிறுவனங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும்படி
செய்கின்றனர். பொருளாதார அடியாட்களின் மோசடியுலகில் பல ஆண்டுகள் தானும் ஒரு
பொருளாதார அடியாளாகச் செயல்பட்டு வந்த ஜான் பெர்க்கின்ஸ், அந்தக் கயவர்களைத் துணிச்சலோடு
இப்புத்தகத்தில் தோலுரித்துக் காட்டுகிறார். அதோடு, அமெரிக்க அரசுக்கும்
பெருநிறுவனங்களுக்கும் சர்வதேச நிதி அமைப்புகளுக்கும் இடையேயான கள்ளத்தனமான
கூட்டணியின் அதிகாரப் போக்கிற்கு எதிராக, பொதுமக்கள் என்ற முறையில் நம்மால் எப்படிப்
போர்க்கொடி உயர்த்தி அவ